தலச்சிறப்பு |
கார், அகில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இத்தலம் 'காரகில்' என்று பெயர் பெற்று, பின்னர் 'திருக்காறாயில்' என்று மாறியது.
மூலவர் 'கண்ணாயிரநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'கைலாய நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
இக்கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும். முசுகுந்த சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.
கோயில் தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தின் கரையில் உள்ள விநாயகர் 'கடுக்காய் விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். வணிகன் ஒருவன் தான் கொண்டு வந்திருந்த ஜாதிக்காய் மூட்டைகளுடன் இங்கு ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், இது என்ன என்று கேட்க, கடுக்காய் மூட்டைகள் என்று பொய் சொல்ல, அவை அவ்வாறே மாறின. வந்தவர் விநாயகப் பெருமானே என்று உணர்ந்து, மன்னிப்பு கேட்க, அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அதனால் இவர் இப்பெயர் பெற்றார்.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், கபால முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|